Friday 20 February 2015

படைப்பாளிகளுக்கு பாராட்டு!


தோழர்களே!

நமது வாசிப்போர்களத்தை சேர்ந்த படைப்பாளிகள் கவிஞர். வா.நேரு மற்றும் கவிஞர். சமயவேல்இருவரும் சமீபத்தில் முறையே சூரியகீற்றுக்கள் பறவைகள் நிரம்பிய முன்னிரவு என்ற கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு உள்ளார்கள். அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது கடமையாகிறது. அவ்வண்ணமே பாராட்டு விழா,  21-02-2015 ந் தேதி  பழைய அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள “ STAR RESIDENCY " – RISHWANTH HALL இல் மாலை 05.45 மணிக்கு நடைபெறுகிறது. அனைத்துத் தோழர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


- வாசிப்போர்களம் சார்பாக ,  சு.கருப்பையா.

Monday 9 February 2015

வாசிப்போர்களம்-20;நீராதிபத்தியம்

ஜனவரி மாதம் 9-ந் தேதி நடந்த கூட்டத்தில் தோழர் .மு.சங்கையா , நீராதிபத்தியம் என்ற நூலையும் , தோழர் சு.கருப்பையா ," பகத்சிங்கும் அவரது தோழர்களும் " என்ற நூலையும் அறிமுகம் செய்தார்கள். அதன் சுருக்கமான தகவல்கள் இதோ:

நீராதிபத்தியம்
ஆங்கிலம்: மாட் விக்டோரியா மார்லோ
தமிழில் : சா.சுரேஷ்
பதிப்பகம்: எதிர் வெளியீடு
பக்கம்: 248; விலை -ரூ.200

தண்ணீர் மண்ணின் உயிர்த்துளி
உயிரின் ஜீவநாடி
அது இயற்கை தந்த கொடை

காற்றைப் போல , சூரிய ஒளியைப் போல அனைவருக்கும் பொதுவானதாக இருந்த தண்ணீரின் மீது , கார்பரேட் நிறுவனங்களின் பார்வை பட்டவுடன் அதுவும் விற்பனை சரக்காக மாறி சந்தைக்கு வந்து விட்டது. எண்ணைக்கு இணையான இலாபத்தை தண்ணீரும் வாரி வழங்கும் என்பதை உணர்ந்த கார்பரேட்  நிறுவனங்கள் , ஏழை நாடுகளின் மீதும் , மூன்றாம் உலக நாடுகளின் மீதும் படையெடுக்கத் தொடங்கிவிட்டன. பொது விநியோக முறையிலிருந்து அரசை ஒதுங்கிக் கொள்ளும்படி உலகவங்கி ஆணையிட்டுள்ளது." தண்ணீர் தனியார் மாயம்" என்ற நிபந்தனைக்கு உட்படுகிற நாடுகளுக்கு மட்டுமே கடனை உலக வங்கி வாரி வழங்குகிறது. அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீர்க்கான தனியார் முதலீடு 620 விழுக்காடு உயர வேண்டும் என்று உள்வாங்கி இலக்கு நிர்ணயத்துள்ளது.

எனவே, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் நாடுகளிலுள்ள தேம்ஸ் வாட்டர் , சூயஸ், பெக்டெல் , விவேண்டி, விவோலியா போன்ற நிறுவனங்கள் உற்சாகத்தோடு இங்கேயும் கால்பதிக்கத் தொடங்கியுள்ளன. 

இவர்களின் லாபவெறியால் பூமி மலடாகிப் போனது. பூமியின் ஆழம் வரை சென்று ராட்சதக் குழாய்கள் அமைத்து நீரை உறுஞ்சுவதால் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதோடு , அவைகள் வெளியேற்றும் கழிவு நீரால் மண் வளமும் செத்துவிட்டது. இனி மழை கொட்டோ கொட்டென்று கொட்டினாலும் நிலத்தடிநீர் உயர வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தாகத்திற்குத் தண்ணீர் என்ற நிலை மாறி லாபத்திற்க்குத் தண்ணீர் என்ற நிலை உருவாகிவிட்டது. இனி காசு உள்ளவனுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். தண்ணீர்க்கான செலவு பலமடங்கு கூடும். பொதுக் கிளைகளில் கூட “ WATER ATM” பொருத்தப்படும். இதனால் கார்பரேட் நிறுவனங்களின் லாபம் விண்ணத் தொடும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஜெர்மனியின் RWE, பிரிட்டனின் தேம்ஸ் வாட்டர் என்ற நிறுவனங்களின் வியாபாரம் 9786 விழுக்காடு உயர்ந்துள்ளது. சூயஸ் நிறுவனத்தின் தண்ணீர் வருமானம் ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர். 2001 ஆம் ஆண்டில் மட்டும் தண்ணீர் நிறுவனங்கள் அடைந்த லாபம் 160 பில்லியன் டாலர்(சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்). தண்ணீர் பாட்டில் மூலம் அடைந்த  லாபம் 22 பில்லியன் டாலர். ஆண்டுக்கு 10 விழுக்காடு வளர்ச்சியோடு தண்ணீர் வியாபாரம் முன்னேறிக் கொண்டுள்ளது.

இப்படிப்பட்டத் தகவல்களோடு , தண்ணீர் தாராள மயத்திற்கு எதிரான போராட்டங்களையும் " நீராதிபத்தியம்" விரிவாக பேசுகிறது. அத்தோடு இந்தப் பூமியின் நீர் நிலைகளின் வளம் என்பதென்ன ?, அவை எவ்வாறு இருந்தது? , இன்றைய நிலையென்ன ?, இது தொடர்ந்தால் என்ன நிலை ஏற்படும் என்பது பற்றியெல்லாம் ஒரு சமூக அக்கறையோடு  இந்நூலில் விளக்கி படிப்பவர்களை விழிப்புணர்வு அடையச் செய்கிறார் மாட் விக்டோரியா மார்லோ. இவர் கனடா நாட்டைச்சேர்ந்தவர் . பதினோரு முனைவர் பட்டங்களையும்  மற்றும் பல விருதுகளையும் பெற்றவர். இந்நூலை சா.சுரேஷ் அவர்கள்  தமிழில் அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். மூலத்தின் ஜீவனை அப்படியே கொண்டு வந்தது போல் இருக்கிறது. இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்ல முடியாத அளவிற்குசரளமான நடை நூல் முழுவதும் ஓடி வருகிறது. தண்ணீரைப் பற்றி நாம் அறியாத பல செய்திகளை தாங்கி வந்துள்ள " நீராதிபத்தியம்என்ற நூலை நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டும்.

-மு.சங்கையா.


(“ பகத்சிங்கும் அவரது தோழர்களும்” – விரைவில்)