Sunday 5 November 2017

ஸ்பார்டகஸ்


ஸ்பார்டகஸ் : நான் யாருக்கும் அடிமையில்லை!
மருதன்


விக்டோரியன் காலத்து இங்கிலாத்தில் கன்ஃபஷன்ஸ்என்னும் பெயரில் சுருக்கமான வினா விடைகளைத் தயாரித்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வழக்கம் மக்களிடையே பிரபலமாக இருந்தது. பிடித்த நிறம், பிடிக்காத விஷயம், பிடித்த தொழில், பிடிக்காத செயல் போன்ற அடிப்படைக் கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்கவேண்டும் என்பது நியதி. 1865ல் கார்ல் மார்க்ஸும் இப்படிச் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிலொரு கேள்வி : உங்கள் கதாநாயகன் யார்? ஸ்பார்டகஸ் என்று பதிலளித்தார் கார்ல் மார்க்ஸ். (அவர் முன்னிறுத்திய மற்றொருவர், ஜெர்மானிய வானவியல் அறிஞர் ஜொஹனஸ் கெப்ளர்). உங்களைப் பொருத்தவரை மகிழ்ச்சி என்பது என்ன என்னும் கேள்விக்கு மார்க்ஸ் ஒரே வார்த்தையில் பதிலளித்தார். போராட்டம்.

ஸ்பார்டகஸ் (பொது யுகத்துக்கு முன்பு 109-71) பற்றி மிகக் குறைவான வரலாற்றுப் பதிவுகளே காணக்கிடைக்கின்றன. அவ்வாறு கிடைத்திருக்கும் பதிவுகளும்கூட பல சமயங்களில் ஒன்றோடொன்று பொருந்தாமல், தனித்தனி கதைகளைச் சொல்வதாக அமைந்துள்ளன. அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு போரிட்ட மாவீரன் என்றும் விடுதலை வேட்கையின் சின்னம் என்றும் புகழப்படும் ஸ்பார்டகஸ் குறித்து ஏன் குறைவான பதிவுகள் என்பதற்கும் ஏன் முரண்பட்ட கருத்துகள் என்பதற்குமான விடைகளை நாம் கண்டுபிடித்தாகவேண்டும். அதற்கு முன்னால் கிடைத்திருக்கும் விவரங்களின் அடிப்படையில் ஸ்பார்டகஸ் குறித்த சுருக்கமான ஒரு சித்திரத்தை உருவாக்க முயற்சி செய்யலாம்.

ரோமில் அடிமைமுறை மிகப் பரவலாக இருந்த காலகட்டம் அது. ரோமில் மட்டுமல்ல பண்டைய நாடுகள் ஒவ்வொன்றிலும் அடிமைமுறை வேறூன்றியிருந்தது. ஆனால், ரோம சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகள் பிற நாடுகளில் இருந்தவர்களைக் காட்டிலும் பல மடங்கு கீழான நிலையில் இருந்தனர். மனிதர்களாக அல்ல, உடைமைகளாகவே அவர்கள் கருதப்பட்டனர். என்னிடம் இவ்வளவு நிலம் இருக்கிறது என்பது போல் இத்தனை அடிமைகள் இருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர்களாக குடிமக்கள் இருந்தனர். தங்கள் இல்லங்களுக்குத் தேவையான பொருள்களோடு சேர்த்து கைவினைஞர்கள், கவிஞர்கள், தத்துவ ஆசிரியர்கள், கட்டுமானக் கலைஞர்கள் ஆகியோரையும் இயல்பாகச் சந்தையில் வாங்கி சென்றனர். இந்த அடிமைகளை வைத்து வீடுகளும் தோட்டங்களும் அரண்மனைகளும் உருவாக்கிக்கொண்டார்கள். கவிதைகள் இயற்றச் சொல்லியும் விவாதங்கள் நடத்தச் சொல்லியும் மகிழ்ந்தார்கள். சில சமயம் வயதில் இளையவர்களை வாங்கிச் சென்று அவர்களை ஒரு துறையில் பயிற்றுவித்து (ஒரு குதிரையைச் செய்வதுபோல்) வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக்கொள்வதும் உண்டு.

ரோம சாம்ராஜ்ஜியம் அதன் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த சமயத்தில் அடிமைமுறை மேலும் மோசமடைந்தது.கொடூரமான முறையில் அடிமைகள் சித்திரவதை செய்யப்பட்டனர். விலங்குகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளக்கூட அவர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க மறுக்கப்பட்டனர். ஒருவேளை, விலங்குகள் தாக்கி உயிரிழந்தால் அதே விலையில் வேறு அடிமைகளா இல்லை சந்தையில்? அதனால்தான், தவறிழைக்கும் அடிமைகளைச் சர்வசாதாரணமாக சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.

ஸ்பார்டகஸ் திரேஸ் (Thrace) என்னும் பகுதியில் (இன்றைய பல்கேரியா) ஒரு சுதந்தர மனிதனாகப் பிறந்தான். பிறகு, ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு அடிமையாக விற்கப்பட்டான். அப்போதே அவனுடைய உடல் வலிமையைக் கண்டு திகைத்த எஜமானர்கள், பிற அடிமைகளைப் போல் அவனை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஒரு அடிமை வீரனாக (கிளேடியேட்டர்) முறைப்படி அவனை வளர்த்தெடுப்பதே அதிக பலன் தரும் என்னும் நம்பிக்கையுடன் கேப்புவா (இன்று தெற்கு இத்தாலியின் ஒரு நகரம்) என்னும் இடத்தில் உள்ள ஒரு பயிற்சிக்கூடத்தில் ஸ்பார்டகஸைச் சேர்த்துவிட்டார்கள்.

பயிற்சி முடிந்ததும் வீரர்கள் திறந்தவெளி மைதானத்தில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு சாவார்கள். அதைக் கண்டு மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து மகிழும். அடிமைகளோடு சேர்த்து குற்றவாளிகளும் இவ்வாறு கிளேடியேட்டராக மாற்றப்படுவார்கள். ஓர் அடிமை வீரனாக இருக்க விரும்பாத ஸ்பார்டகஸ் சக அடிமைகள் சுமார் எழுபது பேரோடு சேர்ந்து அங்கிருந்து தப்பியோடினான். தன்னைப் போன்ற இன்னொரு அடிமையை எதிர்ப்பதற்குப் பதில் அடிமை முறையை எதிர்த்துப் போரிட விரும்பினான். எப்படியும் போகப்போகும் உயிரை, நம் அடிமைச் சங்கிலிகளைத் தகர்த்து எறியும் போராட்டத்துக்கு அர்ப்பணித்தால் என்ன என்று அடிமைகளிடம் உரிமையுடன் கோரினான். ஸ்பார்டகஸின் படைப்பலம் பெருகத் தொடங்கியது. அனைவருக்கும் போர்ப் பயிற்சிகள்அளிக்கப்பட்டன. ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்ப்பதற்குத் தோதாதான ஓர் வலுவான படையை ஸ்பார்டகஸ் உருவாக்கினான். அடிமைகள் ஸ்பார்டகஸை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

மவுண்ட் வெசுவியஸ் என்னும் இடத்தில் பொது.யு.மு 73ல் முதல் கட்டப் போர் தொடங்கியது. தங்களுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் அடிமைகளையும் அதன் தலைவனையும் சுலபத்தில் வீழ்த்திவிடலாம் என்று அலட்சியத்துடன் போரிட்ட ரோம ராணுவம், எதிர்பார்த்ததைவிட நீண்ட காலத்துக்கு மோதல்கள் நீடித்ததைக் கண்டு திகைத்துப்போனது. ஸ்பார்டகஸ் திறமையாக இந்தப் போரை தொடர்ந்து நடத்தியபடி முன்னேறிச் சென்றான். மடிந்து விழும் வீரர்களின் இடத்தில் புதியவர்கள் உடனுக்குடன் நியமிக்கப்பட்டார்கள். முன்னேறும் திசையெங்கிலும் பறிமுதல்கள் நடைபெற்றன. தங்களைப் பிணைத்து வைத்த சங்கிலிகளையே ஆயுதமாக மாற்றிக்கொண்டார்கள் வீரர்கள். அணிந்துகொள்ள ஆட்டுத் தோலும் எறுமைத் தோலும் உதவின.கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வைத்து மேலும் தங்களை பலப்படுத்திக்கொண்டார்கள்.

மூன்றாண்டுகள் போர் தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும் படையின் வலிமை அதிகரிப்பதை ரோம் உணர்ந்தது. அடிமைகளின் எழுச்சி தம்மை நேரடியாகப் பாதிக்கும் என்பதை அவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த உயர் குடி மக்கள் உணர்ந்தனர். அடிமைகளால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதை அறிந்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் ஒருவனும் பெரும் செல்வந்தருமான லிசினியஸ் கிராசஸ் (Licinius Crassus), ஸ்பார்டகஸை வீழ்த்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். ஆயிரக்கணக்கான அடிமைகளை வழியெங்கும் கொன்றபடி ஸ்பார்டகஸை நோக்கி முன்னேறினான் கிராசஸ்.

சிலாரஸ் ஆற்றுக்கு அருகில் லுவாமியா என்னும் இடத்தில் பொ.யு.மு 71ல் கடைசிக் கட்டப்போர் நடைபெற்றது. முதல் வரிசையில் இருந்தபடி போரிட்ட ஸ்பார்டகஸ் ஈட்டி வீச்சில் காயமடைந்தான். ரோம ராணுவத்தின் பலம் இப்போது முன்பைவிட பல மடங்கு அதிகரித்திருந்தால், அடிமைப் படையால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. குவிந்திருந்த வீரர்களின் உடல்களுக்கு மத்தியில் ஸ்பார்டகஸின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. எல்லாம் முடிந்து அவருடைய முகாமுக்குச் சென்றபோது, மூவாயிரம் சொச்சம் ரோம வீரர்கள் உயிருடன் சிறைபிடிக்கப்பட்டிருந்ததை ரோம் ராணுவம் கண்டுகொண்டது. அடிமைகளின் எழுச்சி அடக்கப்பட்டுவிட்டது. ஆனால், விடுதலைக்கான ஒரு குறியீடாக ஸ்பார்டகஸ் மாறியிருந்தார்.

ஸ்பார்டகஸ் விடுதலையின் குறியீடு அல்ல, அவன் ரோமை எதிர்த்துப் போரிடவும் இல்லை. அடிமைகளை ரோமிடம் இருந்து மீட்டு தப்பவைப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான் என்கிறார்கள் இன்னொரு சாரார். அவர்கள் வரிசைப்படுத்தும் நிகழ்வுகள் இப்படி இருக்கின்றன.

அடிமைகளின் தலைவனாக உருபெறுவதற்கு முன்னால் ஸ்பார்டகஸ் ரோம ராணுவத்தில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு பிறகு அதிலிருந்து வெளியேறிவிட்டான். அவ்வாறு வெளியேறியபிறகு சிறையிடிக்கப்பட்டு கிளேடியட்டராக விற்கப்பட்டான். அங்கிருந்தும் தப்பிச் சென்றான். ஸ்பார்டகஸுடன் சேர்ந்து எழுபது வீரர்கள் வெளியேறி, மவுண்ட் வெசுவியஸில் தஞ்சமடைந்தனர். அதையே ஒரு தளமாக மாற்றிக்கொண்டு பிறருக்கும் பயிற்சியளித்தனர். தொடக்கத்தில் ஸ்பார்டகஸின் படையை ரோம் குறைத்தே மதிப்பிட்டது. தன்னை எதிர்நோக்கி வந்த முதல் நான்கு படைகளை ஸ்பார்டகஸின் வீரர்கள் எதிர்கொண்டு வீழ்த்தினார்கள். அப்போது ஸ்பார்டகஸின் படை பலம் 90,000 முதல் 1,20,000 வரை இருந்தது. ஆல்ப்ஸ் பகுதியைக் கடந்து சென்றுவிட்டால் ரோமப் படைகளிடம் இருந்து வெகு தொலைவுக்குச் சென்றுவிடலாம், அப்போது அச்சுறுத்தல்கள் இருக்காது என்று ஸ்பார்டகஸ் கருதினார்.ஆனால் அவருடைய கமாண்டரான கிரிக்சஸ் ரோமை நேரடியாக எதிர்கொண்டு போரிட விரும்பினார். 30,000 வீரர்களுடன் சென்ற இந்தப் பிரிவு ரோமால் அழிக்கப்பட்டது. அடுத்தடுத்து மூன்று முறை வென்ற ஸ்பார்டகஸின் படையை இறுதியாக லிசினியஸ் கிராசஸ் வீழ்த்தினான். ஸ்பார்டகஸ் கொல்லப்பட்டான் ஆனால் அவன் உடல் கிடைக்கவில்லை.

ஆக, ஸ்பார்டகஸ் அடிமைகளை மீட்டெடுத்தான் என்பதை இந்த இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஸ்பார்டகஸ் ஒரு திறமையான போர் வீரன் என்பதையும் படைத் தலைவன் என்பதையும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் அடிமைகளை அவன் தப்ப வைத்தானா அல்லது அவர்களைக் கொண்டு ரோம சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போரிட்டானா என்பதில் வேறுபாடுகள் எழுகின்றன.
ஸ்பார்டகஸுக்கு ஆதரவான இன்னுமொரு தரப்பும் இருக்கிறது. இவர்கள் ஸ்பார்டகஸின் வலிமையையும் திறனையும் பல மடங்கு உயர்த்திக் காட்டுகிறார்கள். அசாத்திய திறமையும் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றலும் கொண்டவனாக ஸ்பார்டகஸை இவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்தைக் கிடுகிடுக்கச் செய்த மாபெரும் தலைவன் என்றும் கடவுளுக்கு நிகரானவன் என்றும் ஸ்பார்டகஸ் இவர்களால் உருவகப்படுத்தப்படுகிறான்.

தொகுத்துப் பார்க்கும்போது சில விஷயங்கள் பிடிபடுவதில்லை. ஸ்பார்டகஸ் அடிமைகளைத் திரட்டி அவர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி, ரோமப் படைகளுக்கு எதிராகப் போரிட்டான். அவனது கலகம் அடக்கப்பட்டுவிட்டது. இதில் மேலதிகம் சிலாகிக்க என்ன இருக்கிறது? எதிரிகளின் கரங்களில் விழுந்துபட்ட ஒரு தலைவனை ஒரு மகத்தான வீரனாக வேண்டுமானால் முன்னிறுத்தலாம், ஒரு புரட்சியாளராக எப்படி உயர்த்த முடியும்? ரோம வரலாற்றில் ஸ்பார்டகஸுக்கு முன்பாகவே பல எழுச்சிகள் நடைபெற்றுள்ளன. ஸ்பார்டகஸின் எழுச்சி எந்த வகையில் இவற்றிலிருந்து மாறுபட்டது? எந்த அடிப்படையில் ஸ்பார்டகஸ் தனித்துவத்துடன் திகழ்ந்தான்? எதனால் அவன் விடுதலையின் சின்னமாக அறியப்படுகிறான்?

இடதுசாரி அரசியல் விமரிசகரும் எழுத்தாளருமான ஆலன் உட்ஸ் எழுதுகிறார். மகத்தான புரட்சியாளரும் பண்டைய வரலாற்றின் சிறப்புமிக்க படைத் தலைவராகவும் திகழ்ந்த ஸ்பார்டகஸ் என்னும் மனிதன் குறித்து நமக்கு அதிகம் தெரியவில்லை என்பது உண்மைதான். வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது. உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறுகளும்கூட நமக்கு வெற்றி பெற்றவர்கள் வாயிலாகவே தெரியவருகின்றன. அடிமைகளின் குரல் அவர்களுடைய எஜமானர்கள் மூலமாகவே நமக்குக் கேட்கக் கிடைக்கிறது. (ஸ்பார்டகஸ் விஷயத்தில்) அடிமைகள் பற்றி நமக்குக் கிடைத்திருக்கும் சிற்சில விஷயங்களும்கூட அவர்களுடைய எதிரிகளால் எழுதப்பட்டவை என்பதை நாம் மறக்கக்கூடாது. அடிமைகள் பற்றி ரோம வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய பதிவுகள் வன்மத்துடன் எழுதப்பட்டவை. எனவே அவை முரண்பட்டு நிற்கின்றன.

அவர் மேலும் தொடர்கிறார். வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்படும் வரலாறு அவர்கள் நலன் சார்ந்தவையாக இருக்கின்றன. அவர்களுடைய உளவியலை, அவர்களுடைய விருப்பங்களைப் பிரதிபலிப்பவையாக இருக்கின்றன.ஆளும் வர்க்கத்தின் தரப்பையே இந்தப் பதிவுகள் முன்வைக்கின்றன. ஸ்பார்டகஸை இத்தகைய பதிவுகள்மூலம் புரிந்துகொள்ள முயல்வது ரஷ்யப் புரட்சியை எதிர்க்கும் பூர்ஷ்வாக்களிடம் இருந்து லெனினையும் ட்ராட்ஸ்கியையும் புரிந்துகொள்ள முயல்வதற்குச் சமமானது.

ஸ்பார்டகஸ் மட்டுமல்ல இனி நாம் காணவிருக்கும் அனைத்து நாயகர்களுக்கும் பொருந்தக்கூடிய பொது விதி இது. ஒடுக்கப்பட்டவர்களையும் அவர்களுக்குக் குரல் கொடுத்தவர்களையும் வெற்றி பெற்றவர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் இருந்தே நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.இந்தக் குறிப்புகளின் அடிப்படையிலேயே அவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம். உடைந்தும் சிதைந்தும் முரண்பட்டும் நிற்கும் இந்தப் பதிவுகளில் இருந்து கிடைக்கக்கூடிய பிம்பங்களை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பல அபாயங்கள் இருக்கின்றன.

இதற்கு மாற்று, வெற்றியாளர்களின் பதிவுகளை முற்றிலுமாக மறுதலிப்பது அல்ல. மாறாக, அப்பதிவுகள் மீள்ஆய்வு செய்யப்படவேண்டும். புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். சறுக்கல்கள், வெற்றிகள் இரண்டையும் ஆராய்ந்திட வேண்டும். விடுபடல்களை எச்சரிக்கையுடன் தேடியெடுக்கவேண்டும். அழுந்தி கிடக்கும் குரல்களை மேலே கொண்டுவரவேண்டும். ஒடுக்கியவர்களின் வரலாற்றுக்கு மாற்றாக, ஒடுக்கப்பட்டவர்களின் வரலாற்றைக் கட்டமைத்து முன்வைக்கவேண்டும்.

ஸ்பார்டகஸை இந்தப் பின்னணியில் மீள்வாசிப்பு செய்யும்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு சித்திரம் கிடைக்கிறது. அவரை ஏன் புரட்சியாளர் என்று அழைக்கவேண்டும் என்பதற்கான வலுவான காரணங்கள் இதில் கிடைக்கின்றன.



ஸ்பார்டகஸ் : பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதி

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் புளூடார்க் (Plutarch) ஸ்பார்டகஸின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் Life of Crassus  என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.கிரேக்கத்தில் பிறந்து ரோமில் குடியேறி ரோம் குடிமகமான மாறியவர் புளூடார்க். அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட பலரின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர்.

கபுவா (Capua) என்னும் பகுதியில் கிளேடியேட்டர் பள்ளியில் பயிற்சி பெற்று வந்த ஸ்பார்டகஸ், அங்கிருந்து தப்பி ஒரு பெரும் எழுச்சியைத் தலைமை தாங்கி நடத்தினார் என்கிறார் புளூடார்க். ஸ்பார்டகஸின் யுத்தம் என்று அழைக்கப்படும் கிளேடியேட்டர்களின் எழுச்சியும் இத்தாலியின் வீழ்ச்சியும் நடைபெற்ற தருணம் அது. கபுவாவில் Lentulus Batiatus என்பவர் பல கிளேடியேட்டர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். பெரும்பாலானவர்கள் கால், திரேஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏதோ குற்றமிழைத்து அதனால் சிறைபிடிக்கப்பட்ட கைதிகள் அல்ல இவர்கள். குரூரமான எஜமானர்கள் வாய்த்ததால், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு செத்தொழியட்டும் என்று நினைத்து இங்கே சேர்க்கப்பட்டவர்கள். இவர்களில் இருநூறு பேர் தப்பிச்செல்ல திட்டம் தீட்டினர். ரகசியம் வெளியில் கசிந்துவிட்டதால் எச்சரிக்கையடைந்த 78 பேர் கையில் கிடைத்த ஆயுதங்களைத் திரட்டிக்கொண்டு தப்பிச்சென்றனர். நகருக்குள் நுழைந்து மேலும் சில ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

புளூடார்க் தொடர்கிறார். ஒரு பாதுகாப்பான பகுதியைச் சென்றடைந்ததும் இவர்கள் (அடிமைகள்) மூன்று பேரைத் தங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த மூவரில் ஸ்பார்டகஸ்தான் தலைவன். திரேசியனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவனுமான ஸ்பார்டகஸ் , பலம் பொருந்திய ஒரு நாயகன். என் புரிதலின்படி அவன் மற்றவர்களைக் காட்டிலும் மேலானவனாக, மற்ற குடிமக்களைக் காட்டிலும் உயர்ந்தவனாக, உண்மையான திரேஸியனாகத் திகழ்ந்தான்.

அரசர்களையும் ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் வியந்தோதி வரலாறுகள் எழுதிய புளூடார்க், ஸ்பார்டகஸ் என்னும் அடிமையை புகழ்ந்து எழுதியிருப்பது ஆச்சரியமூட்டும் விஷயம் மட்டுமல்ல, முரண்பாடானதும்கூட. ஆலன் உட்ஸின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘எதிரியாக இருந்தும், ஸ்பார்டகஸ் குறித்து மிக நல்ல அபிப்பிராயத்தை புளூடார்க் கொண்டிருந்ததற்கான காரணங்களை நாம் கண்டுபிடித்தாகவேண்டும்.

இரு காரணங்களை உட்ஸ் முன்வைக்கிறார். ஒன்று, எவராலும் மறுக்கமுடியாதபடி ஸ்பார்டகஸின் வெற்றி அழுத்தமானதாகவும் ரோம சாம்ராஜ்ஜியமே ஏற்கும்படி அதிர்ச்சியூட்டும்படியும் இருந்திருக்கிறது. இரண்டாவது, ஸ்பார்டகஸை உயர்த்திக் காட்டுவதன்மூலம் ரோமர்களின் வீழ்ச்சியைச் சற்றே குறைத்துக் காட்ட வரலாற்றாசிரியர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.

எப்படி என்று பார்ப்போம். சாதாரண அடிமைகள் ஒன்றுசேர்ந்து ரோம ராணுவத்தைக் கதிகலங்க வைத்துவிட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. இதுதான் உண்மையில் நடந்ததும்கூட. ஆனால் இதை அப்படியே பதிவு செய்வது ரோம குடிமக்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக இருக்கும். இப்படிப்பட்ட உண்மைகள்பரவுவது அரச குலத்துக்கும் சாம்ராஜ்ஜியத்துக்கும் அபாயமானது. அதே சமயம், ஸ்பார்டகஸைக் கண்டும் காணாமல் இருந்துவிடவும் முடியாது. ஒரே வழி, ஸ்பார்டகஸை அசாத்திய பலம் கொண்டவராக, அற்புத சக்தி கொண்டவராகச் சித்தரிப்பதுதான். ஒரு சாதாரண அடிமை ரோம சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்திவிடவில்லை, பேராற்றல் மிக்க அபூர்வமான ஒருவீரனே, ‘மற்றவர்களைக் காட்டிலும் மேலான’ ‘மற்ற குடிமக்களைக் காட்டிலும் உயர்ந்தவனான’ ‘உண்மையான திரேசியனானஒருவனால்தான் ரோம் ஆட்டம்கண்டது என்று சொல்வது ஒரு வகையில் ஆறுதல் அளிக்கக்கூடியது.

புளூடார்க் தொடர்கிறார். கத்தி உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் அடிமைகள் மவுண்ட் வெசுவியஸ் சரிவுகளுக்கு வந்து சேர்ந்தனர். செய்தி கேள்விப்பட்டு கிராமப்புறங்களில் இருந்த அடிமைகளும் கலகக்காரர்களுடன் இணைந்தனர். அவர்களுடைய (அடிமைகள்) பலம் பெருகத் தொடங்கியது. உணவு, உடைமைகள் தேடி அவர்கள் நகரை வலம் வரத் தொடங்கினர். முதலில் சிறிய வெற்றிகளே கிடைத்தன. பிறகு பெரும் வெற்றிகள் தேடி வந்தனராணுவ வீரர்களின் சீருடைகளை அவர்கள் அணிந்துகொண்டனர். அவமானத்துக்குரிய தங்களுடைய பழைய ஆடைகளை அவர்கள் துறந்தனர்.

அடிமைகள், வீரர்களாக உருபெற்ற தருணம் இது. அடிமை உடை அல்ல, படை வீரனுக்குரிய சீருடையே தனக்குத் தேவை; சங்கிலி அல்ல, வாள்களே தேவை என்று அடிமைகள் உணர்ந்தெழுந்த தருணம் என்றும் சொல்லலாம். சிறு வெற்றிகள் தந்த மகிழ்ச்சியில் உத்வேகம் பெற்று பெரும் சவால்களை எதிர்கொள்ள அடிமை வீரர்கள் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நடைபோடுகிறார்கள். அவ்வாறு நடைபோடும்போது அவர்கள் முறையான வீரர்களாகவும் போராளிகளாகவும் மாறியிருந்தனர். உன்னதமான உணர்வுகள் அவர்களுடைய உள்ளத்தில் பொங்கியெழுந்திருக்கும்.

ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவன் திமிறி எழுந்து அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும்போது ஒரு வீரனாக உருமாறுகிறான். அதுவரை சாமானியனாக இருந்த அவன், அந்தத் தருணத்தில் அசாத்திய பலம் பொருந்தியவனாக மாறுகிறான். வரலாற்றில் நடைபெற்ற ஒவ்வொரு புரட்சியிலும் ஒவ்வொரு வேலை நிறுத்தத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் மேலேழும்புவதைக் காணலாம்என்கிறார் உட்ஸ். சாமானிய தொழிலாளிகள் (அடிமைகளின் வழிவந்தவர்கள்) தங்களுடைய மெய்யான உயரத்துக்குத் தங்களை உயர்த்திக்கொள்கிறார்கள். சுதந்தரமான ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் நடந்துகொள்கிறார்கள்.

சாமானியர்களின் போராட்டத்தை ஓர் அரசு இன்று எப்படி அலட்சியமாக மதிப்பிட்டு எதிர்கொள்கிறேதா அப்படியேதான் அன்றும் செய்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் உட்ஸ். அடிமைகளின் எழுச்சியை சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்னையாகவே ரோம் கருதியிருக்கிறது. சில காவலர்களை அனுப்பி மக்கள் கூட்டத்தை விலக்க முயல்வதைப் போல் ராணுவத்தின் ஒரு சிறு பகுதியை அனுப்பி அடிமைகளைச் சுற்றிவளைத்துக் கொன்றுவிடும்படி மேலிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அவ்வாறே வெசுவியஸில் வீரர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர். கடினமான மலைப்பகுதியைக் கடந்துதான் அவர்கள் மாற்று வழியில் செல்லமுடியும், ஆனால் அங்கும் ராணுவம் இருந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை புளூடார்க் விவரிக்கிறார். உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த கொடிகளையும் வேர்களையும் அகற்றி ஏணிகளை (அடிமைகள்) உருவாக்கினார்கள். தரைக்குச் செல்லும் வரை வளர்ந்திருந்த அந்த ஏணியைப் பயன்படுத்தி எல்லோரும் கீழே இறங்கினார்கள். ஒருவன் மட்டும் மலை உச்சியில் நின்றிருந்தான். ஆயுதங்கள் அனைத்தையும் கீழே போட்டுவிட்டு அவன் தானும் தப்பித்துக்கொண்டான். எதிர்பாராத திசையில் இருந்து வந்திறங்கிய படையைக் கண்டு திகைத்த ரோமானியர்கள் சுலபத்தில் வீழ்த்தப்பட்டனர். அவர்களுடைய கூடாரம் கைப்பற்றப்பட்டது.

ராணுவ கமாண்டர் கிளாடியஸ் கிளேபர் தனது கூடாரத்தைப் பாதுகாக்கக்கூட போதுமான படைவீரர்களை நியமிக்கவில்லை. இந்த அலட்சியத்துக்கு அவர் பெரும் விலை கொடுக்கவேண்டியிருந்தது. படுக்கையிலேயே பல வீரர்கள் கொல்லப்பட்டதோடு, அவர்களுடைய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஸ்பார்டகஸின் படைபலம் இப்போது பல மடங்கு பெருகிப்போனது. எல்லாவற்றையும்விட, ‘நம்மால் போரிடமுடியும், வெல்லமுடியும் என்னும் உணர்வை வீரர்கள் வென்றெடுத்தார்கள்.இதுவே அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்கிறார் உட்ஸ்.

spartacus-representative-of-proletariat-3சாமானியர்களை அல்ல, தவிர்க்கவியலாத ஒரு பெரும் சக்தியை நாம் எதிர்த்துக்கொண்டிருக்கிறோம் என்னும் புரிதல் ரோமுக்கு ஏற்பட்டது இதற்கெல்லாம் பிறகுதான். ஸ்பார்டகஸின் பலம் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். ஆனால், இதையெல்லாம்விட அவர்களை அதிகம் அச்சுறுத்திய உண்மை எது தெரியுமா?

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில், தோட்டத்தில், பண்ணையில் பல நூறு அடிமைகளை அடுக்கி வைத்திருந்தனர். நேற்றுவரை அடிமைகள்தாம். ஆனால் இப்போதோ அவர்கள் வலுவான எதிரிகள். இனியும் அவர்கள் உதிரிகளில்லை. சொல்வதைச் செய்து முடிக்கும் உணர்வற்ற ஜடங்கள் இல்லை. ஒவ்வொரு அடிமையும் ஒரு சக்தி. ஒரு பெரும் படையின் பாகம். மறுக்க மட்டுமல்ல எதிர்க்கவும் அவர்கள் துணிந்துவிட்டார்கள். மட்டுமின்றி, வெல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள். மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் படைகளை அவர்கள் அநாயசமாக முறிடியத்திருக்கிறார்கள். இனி என்னச் செய்யப்போகிறோம் அவர்களை? அடிமைகளைக் கண்டு எஜமானர்கள் அஞ்சத் தொடங்கியபோது, அதுவரை ஒரு திறமையான படைத் தலைவனாக மட்டுமே இருந்த ஸ்பார்டகஸ், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியாகவும் மாறியிருந்தார்.


பொயுமு 73 வாக்கில் இத்தாலியின் தெற்கு கரைப் பகுதியில் கூடாரமிட்டிருந்தது ஸ்பார்டகஸின் படை. இத்தாலி, ஆல்ப்ஸ் ஆகியவற்றைக் கடந்து கால் (இப்போது பிரான்ஸில் உள்ள இப்பகுதி அப்போது ரோமின் ஆளுகைக்கு முழுக்க ஆட்படாமல் இருந்தது) நோக்கி முன்னேறி தப்பிப்பதே ஸ்பார்டகஸின் திட்டம்.

ஸ்பார்டகஸை இனியும் முன்னேறவிடக்கூடாது என்பது ரோம் செனட்டின் தீர்மானமான திட்டம். பலம் வாய்ந்த இரு படைப் பிரிவுகளை இந்த முறை ரோம் ஸ்பார்டகஸை நோக்கி அனுப்பிவைத்தது. ஆனால், இதைக் காட்டிலும் பெரிய சவலை ஸ்பார்டகஸ் தன் தரப்பில் இருந்தே எதிர்கொள்ளவேண்டியிருந்தது. கமாண்டர் கிரிக்சஸ் ஸ்பார்டகஸின் தலைமையை ஏற்க மறுத்து 30,000 அடிமை வீரர்களைத் தனியே பிரித்துச் சென்றான். புளூடார்க்கின் குறிப்புகளின்படி கிரிக்சஸ் தன் பலத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டவனாக அப்போது மாறியிருந்தான். முந்தைய வெற்றிகள் கொடுத்த துணிச்சல் இது. ஸ்பார்டகஸின் திட்டத்தையும் தலைமையையும் ஏற்க அவன் மறுத்தான். எதற்காக ஸ்பார்டகஸின் கீழ் பணிபுரியவேண்டும், நானே ஒரு தலைவன்தான் என்று கிரிக்சஸ் நினைத்திருக்கவேண்டும். இந்த நினைப்போடு இத்தாலிக்குள் நுழைந்த கிரிக்சஸும் அவனுடைய வீரர்களும் உற்சாகமாக நகரைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தனர்.

ரோம் செனட் தனது திட்டத்தை மாற்றியமைத்தது. ஸ்பார்டகஸை நோக்கி ஏவிவிடப்பட்ட இரு படைப் பிரிவுகளும் இப்போது கிரிக்சஸை நோக்கி திருப்பிவிடப்பட்டன. தான் செய்தது சாதாரணத் தவறல்ல பெரும் தவறு என்று கிரிக்சஸ் உணர்வதற்குள் அவன் படையில் இருந்த 20,000 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். கிரிக்சஸையும் கொன்ற ரோம ராணுவம் தனது முதல் பெரும் வெற்றியை ஈட்டியது. ஆனால் அதே வேகத்தில் ஸ்பார்டகஸை நோக்கிப் பாய்ந்து வந்த இந்த இரு படைகளும் திட்டவட்டமாக முறியடிக்கப்பட்டது.

கிரிக்சஸைத் தோற்கடித்த ரோமால் ஸ்பார்டகஸைத் தோற்கடிக்க முடியாததற்கான காரணங்கள் ஆலன் உட்ஸின் ஆய்வில் கிடைக்கின்றன. கிரிக்சஸ் தலைமைக்குக் கீழ்படிய மறுத்தான். அதே சமயம், ஒரு நல்ல தலைவனாக வளரவும் அவனால் இயலவில்லை. தான் பிரித்துச் சென்ற முப்பதாயிரம் வீரர்களை ஒன்றுபடுத்தி ஒரே இலக்கை நோக்கி நகர்த்த அவனுக்குத் தெரியவில்லை. அதற்கும் மேலாக, அவன் ஒழுக்கமற்றவனாக இருந்தான். வர்க்க நலன் அல்ல, சுயநலனே அவனை உந்தித்தள்ளியது. அதுவே அவனை வீழ்த்தவும் செய்தது.

மாறாக, ஸ்பார்டகஸ் தன்னிடம் இருந்த வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசும், பல்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்களை ஒழுங்குபடுத்தியும் தொகுத்தும் வைத்திருந்தார். நம்பிக்கையையும் ஊக்கத்தையும் மட்டுமின்றி நல்லொழுக்கத்தையும் அவர்களுக்கு ஊட்டியிருந்தார். ரோமப் படைகளைத் தொடர்ச்சியாக வென்றபோதும் ஸ்பார்டகஸ் கர்வமோ குருட்டு துணிச்சலோ கொள்ளவில்லை.வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக அணுகி, இரண்டில் இருந்தும் பாடங்கள் கற்று, இரண்டையும் கடந்து தன் வழியில் அவர் முன்னேறிக்கொண்டிருந்தார். இறுதிவரை ஒரே இலக்கு. அடிமைகளின் விடுதலை. தன்னை எதிர்த்து வெளியேறிய கிரிக்சஸின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஸ்பார்டகஸ் தயங்கவில்லை. அந்த வகையில், ஒரு வீரனாகவும் திறமையாளனாகவும் மட்டுமின்றி மனிதாபிமானம் மிக்க மனிதானாகவும் ஸ்பார்டகஸ் திகழ்ந்தார்.

இதற்கிடையில் கால் நோக்கி முன்னேறத் திட்டமிட்டிருந்த ஸ்பார்டகஸ் திடீரென்று மீண்டும் இத்தாலியை நோக்கி திரும்பத் தொடங்கியது ஏன் என்பதற்கு விளக்கங்கள் இல்லை. ஒருவேளை ஸ்பார்டகஸ் கால் வழியாக ஜெர்மனிக்குச் சென்றிருந்தால் ரோமிடம் இருந்து முற்றிலுமாகத் தப்பியிருக்கலாம். அருகில் ஸ்பெயினில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எழுச்சி ஆரம்பமாகியிருந்தால் அங்கும்கூட அவர் பாதுகாப்பாக இருந்திருக்கலாம்.

இத்தாலி நோக்கி நகர ஆரம்பித்த ஸ்பார்டகஸின் படை இப்போது பலவீனமடைந்திருந்தது. காரணம், பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று அடிமைகளின் குடும்பத்தைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இப்போது ஸ்பார்டகஸின் பயணத்தில் இணைந்திருந்தனர். அவர்களுடைய வரவால், பயணத்தின் வேகம் குறைந்தது. அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டிய கூடுதல் பொறுப்பும் இப்போது வீரர்களுக்குச் சேர்ந்திருந்தது.

மற்றொரு பக்கம், தன் எதிரியின் பலத்தை இப்போது நன்கு உணர்ந்திருந்த ரோம் தன் பலம் அனைத்தையும் திரட்டி பாய்ந்து வந்தது. ஒரு மோதலின்போது ஸ்பார்டகஸ் ரோம ராணுவக் கைதி ஒருவனை சிலுவையில் அறைந்து தண்டித்தார். உடனே ரோமில் பிரசார இயந்திரம் வேகமாக இயங்க ஆரம்பித்துவிட்டது. அடிமைகளின் குரூரமான, காட்டுமிராண்டித்தனமானசெய்கைகள் குறித்து அவர்கள் அங்கலாய்க்க ஆரம்பித்தார்கள். அடிமைகளை இத்தனை காலம் அழுத்தி வைத்திருந்ததன் காரணம் இப்போது புரிகிறதா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்கள். பல நூறு அடிமைகளை அவர்கள் சிலுவையில் அறைந்து கொன்றதை வசதியாக அவர்கள் மறந்துபோனார்கள். நடைபெற்றது போர் என்பதையும் ஸ்பார்டகஸ் நிறைவேற்றியது போர்க்காலத் தண்டனை என்பதையும் அவர் தண்டித்தது ஒரு போர் வீரனைத்தான் என்பதையும் அவர்கள் மறைத்தார்கள்.

மிகத் திறமையாகவும் வஞ்சகத்துடனும் அவர்கள் செய்த இன்னொரு காரியம், ரோம ராணுவத்தின் வன்முறையையும் அதனை எதிர்த்தும் அதிலிருந்து மீண்டெழவும் ஸ்பார்டகஸ் செலுத்திய வன்முறையையும் ஒன்றாக்கிச் சமன்படுத்தியது. ஸ்பார்டகஸ் காலம் தொடங்கி இன்றுவரை தொடரும் பிரசாரப் போக்கு இது. ஆதிக்கசக்திகளின் அழுத்தத்தையும் அதற்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்வினையையும் பலர் இன்றும் சமமாகவே பாவிக்கிறார்கள்; சமமாகவே மதிப்பிடுகிறார்கள். இந்த இரு போக்குகளையும் மறுதலிக்கிறேன் என்று சொல்லி நடுநிலைவகிக்கவும் சிலரால் முடிகிறது.

இந்தப் பின்னணியில், அடிமைகளின் தலைவன் என்னும் பெயரோடு காட்டுமிராண்டி என்னும் பெயரும் இப்போது ஸ்பார்டகஸுக்குச் சேர்ந்திருந்தது. புரட்சியை முன்னெடுக்கும் யாவருக்கும் அவப்பெயரும் சேர்ந்தே வரும் என்பது வரலாற்று உண்மை அல்லவா?

ரோம் இரு பிரிவுகளாக பிரிந்து நின்றது. அடிமைகள், எஜமானர்கள். அல்லது, அடிமை முறையால் நலன் பெறும் ஆளும் வர்க்கம், ஸ்பார்டகஸின் கிளர்ச்சியால் தூண்டப்பட்ட அடிமை வர்க்கம். ஸ்பார்டகஸை வளரவிடுவது தம் வர்க்க நலன்களுக்கு எதிரானது என்று கருதிய செல்வந்தர்களில் ஒருவனான லிசினியஸ் கிராசஸ் முன்பைவிடத் தீவிரமாக ரோமப் படைகளைத் திரட்டிக்கொண்டான். பலமுறை ரோமப் படைகளை வீழ்த்திவிட்ட ஸ்பார்டகஸோடு நேருக்கு நேர் மோதுவதைவிட மறைமுகமாக பலவீனப்படுத்தலாம் என்று கருதிய கிராசஸ், மிகப் பலமான தடுப்புச் சுவர் ஒன்றை அமைத்தான்.ஒரு பக்கம் சுவர், இன்னொரு பக்கம் ராணுவம், மற்ற பக்கங்களில் கடல். ஸ்பார்டகஸை ஒரு சிறிய மூலையில் தனிமைப்படுத்தி வீழ்த்துவதே அவன் திட்டம். தொழில்நுட்பரீதியிலும் சரி, போர்முறையிலும் சரி, நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்ட வியூகம் இது. ஸ்பார்டகஸால் சுவரையும் உடைக்கமுடியாது. உணவு கிடைக்க மார்க்கமில்லை என்பதால் இருக்கும் இடத்தில் தங்கியிருக்கவும் முடியாது. ஒன்று, பசியால் சாகவேண்டும் அல்லது, திரண்டிருக்கும் ரோம ராணுவத்தின் முழு வலிமையையும் எதிர்கொண்டு சாகவேண்டும்.

ஸ்பார்டகஸ் கிராசஸின் நுட்பமான வியூகத்தை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டார். சுவருக்கு அருகில் பள்ளங்கள் வெட்டப்பட்டன. மரங்கள் சாய்க்கப்பட்டன. பள்ளங்களில் மரங்களை நிறுத்தி, வீரர்கள் மேலே ஏறத் தொடங்கினார்கள். மூன்றில் ஒரு பங்கு படையை ஸ்பார்டகஸ் இவ்வாறு கடத்திச்சென்றான் என்கிறார் புளூடார்க். கிராசஸ் நடுங்கிவிட்டான். அடுத்து ரோமுக்குள் நுழைந்து ஆட்சியையும் கைப்பற்றிவிடுவார்களா அடிமைகள்?

ஆனால், கிராசஸ் நம்பிக்கை இழக்கவில்லை. த்ரேஸில் இருந்தும் போம்பேயிடம் இருந்தும் கூடுதல் படைகள் வேண்டி முன்கூட்டியே கிராசஸ் விண்ணப்பித்திருந்தான். இறுதிப்போரில் வெல்லப்போவது தானே என்பது அவனுக்குத் திட்டவட்டமாகத் தெரிந்தது. அதே சமயம், அவனுக்குள் புதிதாக வேறொரு பயம் புகுந்திருந்தது. போம்பேயை (Pompey) அழைத்தது தவறோ? போர் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் உள்ளே புகுந்து ஸ்பார்டகஸை வீழ்த்தி ஒட்டுமொத்த புகழுயும் போம்பே அபகரித்துவிடுவானா? ஆலன் உட்ஸ் இந்த மனநிலையைத் துல்லியமாகப் படம்பிடித்து காட்டுகிறார். புகழ் சேர்க்க ஒரே சிறந்த வழி, போர். அது யாரை எதிர்த்து நடத்தப்படுகிறது, எப்படி நடத்தப்படுகிறது என்பதெல்லாம் முக்கியமில்லை. வெற்றி மட்டுமே முக்கியம். கிராசஸ் மட்டுமல்ல இன்றுவரை தலைவர்கள் தங்கள் புகழை உயர்த்திக்கொள்ள போரையே நாடிச் செல்கிறார்கள்.

கிராசஸ் பயந்ததைப் போலவே அடிமைகளின் எழுச்சியை வீழ்த்திய பெருமையை கடைசி நேரத்தில் போம்பே தட்டிச்சென்றான். கிராசஸுக்குச் சாதாரண வரவேற்பும் போம்பேவுக்கு அரசு மரியாதையும் (போம்பே தி கிரேட் என்று அவன் அழைக்கப்பட்டான்) வழங்கப்பட்டன. பிற்காலத்தில் ஜூலியஸ் சீஸரின் மகளைத் திருமணம் செய்துகொண்ட போம்பே, ஒரு கட்டத்தில் ரோமக் குடியரசைக் கைப்பற்ற சீஸருடனும் போட்டியிடத் தொடங்கினான். இருவருக்குமான பகை ரோமில் சிவில் யுத்தத்தை ஏற்படுத்தியது. இறுதியில் தோல்வியுற்ற போம்பே எகிப்துக்குத் தப்பிச்சென்று, அங்கேயே கொல்லப்பட்டான். ஆளும் வர்க்கம் தனது வர்க்க எதிரிகளுக்கு எதிராக முதலில் போரிடுகிறது. பிறகு அதிகார வெறிõயல் உந்தப்பட்டு தனது வர்க்கத்தைச் சார்ந்தவர்களையே வீழ்த்தத் துடிக்கிறது. இந்த வழக்கமும் இன்றும் தொடர்வதுதான்.

ஸ்பார்டகஸ் தனது இறுதிக் கட்டப்போரில் மேலும் ஒரு பிளவைச் சந்தித்தார். அவனது படைப் பிரிவில் இருந்து மேலும் ஒரு குழு பிரிந்து சென்றது..அவர்களும் தோல்வியையே சந்தித்தனர். மரணத்துக்குப் பிறகு ஸ்பார்டகஸின் கூடாரத்தில் இருந்து மூவாயிரம் ரோம ராணுவக் கைதிகளை உயிருடன் மீட்ட ரோம ராணுவத்தால் நிச்சயம் வெட்கம் அடைந்திருக்கமுடியாது; ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் திகைத்திருக்கவேண்டும். காரணம், ரோம அதிகாரிகள் வழியெங்கும் தொடர்ச்சியாக அடிமைகளைக் கொன்றொழித்து வந்தனர். ஒருமுறை கபுவா, ரோம் வழித்தடத்தில் கிராசஸ் ஆறாயிரத்துக்கும் அதிகமான அடிமைகளைச் சிலுவையில் அறைந்து கொன்றான். அவர்களுடைய உடல்களைக்கூட அகற்ற உத்தரவிடாததால் அந்தத் தடத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் வீரர்களின் உடல்களைத் தரிசித்தபடியேதான் கடந்து செல்ல வேண்டியிருந்தது.

spartacus-representative-of-proletariat-2போரில் இறுதியாக வென்றது ரோம்தான் என்றாலும் அடிமைகளின் எழுச்சி அவர்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. வரலாற்று உண்மைகள் உணர்த்தும் இந்தப் பாடங்கள் உலகப் பொதுவானவை. எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் சரி, தொடர்ச்சியாக ஒரு பிரிவினரை யாராலும் ஒடுக்கிவைத்திருக்கமுடியாது. அசைக்கமுடியாத பெரும்பலம் என்று இந்த உலகில் எதுவுமில்லை. திராணியற்ற உதிரிகள் ஒரு வர்க்கமாகத் திரளும்போது பெரும் சக்தியாக உருமாறுகிறார்கள். அடிமைகள் எப்போதும் அடிமைகளாக நீடிப்பதில்லை.

காலப்போக்கில் ரோம சாம்ராஜ்ஜியம் தனது பளபளப்பையும் செல்வாக்கையும் இழந்து உதிர்ந்துபோனது. பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அனைத்துக்கும் இதுவே நிலை என்பதை வரலாறு நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது. அதே வரலாறு, ஸ்பார்டகஸைத் தோற்கடிக்கப்பட்டவனாக நமக்கு இன்று அடையாளம் காட்டவில்லை. ஒரு வர்க்கத்தை எழுச்சி கொள்ள வைத்த தலைவனாகவும் உத்வேகமூட்டும் ஒரு வலிமையான சக்தியாகவும் உயர்த்திக் காட்டுகிறது.

27 பிப்ரவரி 1861 அன்று கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு எழுதிய கடிதத்தில், பலம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட போம்பே புழுதியாக மாறியதையும் ஸ்பார்டகஸ் சக்தியுடன் உயர்ந்து நிற்பதையும் கோடிட்டுக் காட்டினார். பண்டைய வரலாற்றிலேயே ஸ்பார்டகஸ்தான் ஒரே முக்கியக் கதாபாத்திரமான எழுந்து நிற்கிறார்அவர் தலைசிறந்த ராணுவ ஜெனரல் மட்டுமல்ல, அவர் காலத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் பிரதிநிதியும்கூட.

நன்றி: மருதன்


Saturday 4 November 2017

பன்னாட்டுச் சந்தையில் பாரதமாதா - நூல் வெளியீடு

பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதா - நூல் வெளியீடு







 முனைவர்.மரிய ஜான் கென்னடி பேராசிரியர் அருளானந்தர் கல்லூரி

எழுத்தாளர்கவிஞர் முனைவர்.வா.நேரு 


முனைவர்.இரா. முரளி மாநில செயலர்மக்கள் சிவில் உரிமைக்கழகம் 


சு.கருப்பையா , ஒருங்கிணைப்பாளர், வாசிப்போர்களம்


நமது உறுப்பினர் தோழர் மு.சங்கையாவின் முதலாவது படைப்பான "லண்டன் " நூலை  வாசிப்போர்களம் பெருமையோடு  வெளியிட்டதை போலவே அவரது இரண்டாவது படைப்பான பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதாநூலையும் வாசிப்போர் களம் மதுரை சார்பில் 26-10-2017 ந் தேதி மாலை 05-30 மணிக்கு “MUTA” அரங்கில் வெளியிடப்பட்டது.




மிகவும் எளிமையாக நடைபெற்ற  இந்த விழாவில் நமது உறுப்பினரும்  , மாநில பகுத்தறிவாளர் கழக தலைவருமான , எழுத்தாளர், கவிஞர் , முனைவர்.வா.நேரு வெளியிட , தோழர். சே. வாஞ்சிநாதன் , மாநில ஒருங்கிணைப்பாளர் , மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.


மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர், முனைவர்.இரா. முரளி , மாநில செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம் அவர்கள் , நூலை பற்றிய சிறப்பான வாழ்த்துறையை வழங்கினார். அத்தோடு , இந்த நூல் அரசியல் பொருளாதாரம் பற்றி பேசுவதால் அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடத்தில் இந்நூலை கொண்டு சேர்க்க வேண்டும் என்று பரிந்துரையும்  செய்தார்.             


முனைவர்.மரிய ஜான் கென்னடி , பேராசிரியர் , அருளானந்தர் கல்லூரி, அவர்கள்  , இந்நூலை பற்றிய தமது பார்வையை மிகச் சரியாக பதிவு செய்தார். இந்நூல் வெளிக்கொணரும் பொருளாதார புள்ளி விபரங்கள் , பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் குறிப்பிடத்தவறவில்லை. அதனால் , நல்லதொரு நூலை வெளிட்ட திருப்தி நமக்கு கிடைத்தது.


நூலின் வெளியிட்டாளர் உரையை பார்வைக்காக கீழே கொடுத்துள்ளேன்:


                            ஒரு நாடு தன்னிறைவு பெற்ற நாடாக விளங்க வேண்டுமென்றால் அந்நாட்டின் பொருளாதாரம், வாணிபம், வெளிநாட்டு உறவுகள், தேசப்பாதுகாப்பு ஆகிய நான்கும் அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி அதன் மூலம் தொழில்நுட்பம், விஞ்ஞானம்  ,விவசாயம் பெருகி நாட்டு மக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும்.அத்தோடு ஏற்றுமதியும், அந்நிய செலாவணியும் அதிகரிக்க வேண்டும். அத்தகைய செயல்த் திட்டங்கள் இன்றைய  சூழ்நிலையில் , மூன்றாம் உலக நாடுகளுக்கு சாத்தியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினால் அதற்கு சாத்தியமில்லை என்ற கசப்பான உண்மை தான் பதிலாக வெளிப்படும்.காரணம் உலகமயமாக்கல் என்கிற போர்வையில் பொருளாதாரத்தில் மேலோங்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  எல்லாத் துறைகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வர சர்வதேச நிதிநிறுவனம்,[IMF],உலகவங்கி , உலக வர்த்தக நிறுவனம்[ world trade organisation] போன்றவற்றைப்  பயன்படுத்திக் கொண்டன . இன்று உலகவங்கியிடமும் , சர்வதேச நிதி நிறுவனத்திடமும்  கடன் பெறாத நாடுகளே இல்லை என்பது தான் உண்மை .அதன் வரலாற்றைத் தான் தோழர் மு.சங்கையா  நிறைய புள்ளி விவரங்களோடு இந்நூலில் மிகத் தெளிவாக தந்துள்ளார்.

                 உலக வங்கியிடம் கடன்பெற்று வீழ்ச்சியடைந்த மெக்சிகோ,பொலிவியா ,மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளின் கண்ணீர் கதைகளை இந்நூல் நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளது .அது மட்டுமல்லாமல் உலகமயத்தின் விளைவால் உருவான சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் தாக்கத்தையும்,,தண்ணீர் தனியார்மயத்தால் கோக்கும்,” “பெப்சியும்நாட்டின்   நீர் வளத்தை அழிக்கும் கதையையும்,ஆறு விற்பனையாவதையும் ,வேதனையுடன் பதிவு செய்துள்ளார் .

           கேரளாவின் பிளாச்சிமடா மக்கள் கோக்கை முறியடித்த வரலாற்றையும் ,பொலிவிய நாட்டில் தண்ணீர் தனியார்மயத்துக்கு  எதிராக கொச்சம்பா நகரத்து மக்கள் நடத்திய வீரம் செறிந்த  போராட்டத்தையும் அதன் வெற்றியையும் நமது மனம் நெகிழும் வண்ணம் எழுதியுள்ளார் .அதே போல் பல நாடுகளில் சில்லைறை வர்த்தகத்தை ஒழித்துக் கட்டிய  வால்மார்ட் பற்றியும், வளரும் நாடுகள் மற்றும் மூன்றாம் உலகநாடுகளின் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க உலக வர்த்தக  நிறுவனம் நிர்ப்பந்தம் செய்யப்படுவதையும் எழுதத் தவறவில்லை.

                இன்றைய சூழ்நிலையில் உலக வங்கி  மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றில் 16 விழுக்காட்டுக்கும் மேல்  பங்குகளை அமெரிக்கா  வைத்திருப்பதால் அதை  மீறி மற்ற நாடுகள்  தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது.. அது இந்தியாவுக்கும் பொருந்தும் .இவைகளின் பிடியை உடைத்து உலக நாடுகள் சுயமாக இயங்குவதற்கான  என்ன வழிமுறைகள்  உள்ளன .அதற்கு வாய்ப்பு இருக்கிறதா ,பிரச்சனைக்கு தீர்வு தான் என்ன  என்பதையும் ஆசிரியர் விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

                         தோழர் மு.சங்கையாவின் முதல் படைப்பான லண்டன்-- ஒரு பழைய சாம்ராச்சியத்தின் அழகிய தலைநகரம் என்ற பயண நூலை வாசிப்போர்களம் மதுரை வெளியிட்டது. அது 2013 ஆம்  ஆண்டிற்கான  தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் சிறந்த நூலாக  தேர்வு செய்யப்பட்டதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.பரிசுக்கு எழுதாமல் சமூகம் மேன்மையுர எழுதுகின்றவர்கள் சிலர் தான். அந்த வரிசையில் இந்த நூலின் ஆசிரியரையும்    சேர்க்கலாம்.பாராட்டும் பரிசும் அந்த எழுத்திற்கான  அங்கீகாரமென்பதோடு அது மேலும் முனைப்போடு எழுதுவதற்கு உந்து சக்தியாக இருக்கிறது என்பதும் உண்மை .

                              தோழர் மு.சங்கையாவின் முதலாவது படைப்பை வாசிப்போர்களம் பெருமையோடு  வெளியிட்டதை போலவே அவரது இரண்டாவது படைப்பான பன்னாட்டுச்  சந்தையில் பாரதமாதாநூலையும் வாசிப்போர் களம் மதுரை சார்பில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

*******

நமது நிர்வாகக் குழு உறுப்பினர் ,, எழுத்தாளர், கவிஞர்   , முனைவர். V. பாலகுமார்  அவர்கள் , வெளீட்டுவிழாவினை  கலைநுட்பத்துடன் தொகுத்து வழங்கினார்.



வாசிப்போர்களம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளை சார்ந்த ஏறத்தாழ 50 பேர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். 


தோழர். சௌந்தர், மற்றும் ஆண்டியப்பன் ஆகியோர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. தோழர்.சங்கையாவின் நெகிழ்வான ஏற்புரைக்குப் பிறகு தோழர். தெய்வேந்திரன் நன்றி நவில,  விழா  குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு பெற்றது.

தோழர். தெய்வேந்திரன்



தோழர்.மு.சங்கையா ஏற்புரை. 

நூலின் விலை: ரூபாய். 225/-
தொடர்பிற்கு: மு.சங்கையா, 
கைபேசி: +919486100608
இல்லம்: 0452-2668001
மதுரை.