Monday 22 January 2018

பெத்தவன்-நெடுங்கதை





இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையத்தின் " எங் கதெ" நாவல் பற்றிய விமர்சனத்தை  ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.  அதில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணின் சிரமங்களையும், அவள் சந்திக்கும் பாலியியல் அத்துமீறல்களையும் மிகவும் யதார்த்தமாக எழுதிருப்பதாக  அறிந்து கொண்டேன்.  1994 இல் தமது " கோவேறு கழுதைகள்" நாவல் மூலம் தமிழ் இலக்கித்திற்குள் நுழைந்த அவரின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்படவில்லை.

அதன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில்   இமையத்தின் கோவேறு கழுதைகள் , செடல், என் கதெ  மற்றும் பெத்தவன் ஆகிய நூல்களை வாங்கி வைத்திருந்தேன். எனது பணி மாற்றம் காரணமாக இந்நூலகளை வாசிக்கும் வாய்ப்பு மீண்டும் தள்ளிப் போனது. இப்போது  " பெத்தவன்" என்ற நீண்டகதையை எடுத்து முதலில் வாசித்தேன். அவர் எடுத்துக் கொண்டிருந்த கதைக்களம் என்னை திகைக்க வைத்து விட்டது. சாதீயத்தையும், ஆணவக்கொலைகளையும் தூக்கிப் பிடிக்கும் கடலூர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர்  இமையம் , அத்தகைய ஒரு நிகழ்வையே நீண்ட கதையாக இந்த " பெத்தவனில் " எழுதியிருக்கிறார்.

வண்டிக்காரன் மூட்டு என்ற கிராமத்தில் வாழும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனி என்ற விவசாயின் மகள் பாக்கியம் , கீழ்சாதியைச் சேர்ந்த  பெரியசாமியை காதலிப்பதையும் அவளை சாகடிப்பதற்கு அக்கிராம மக்கள் முயலுவதையும் , அதற்கு பழனியை கட்டாயப்படுத்துவதும் தான் கதையின் கரு. இறுதியாக பாலிடாயில் விஷம் கொடுத்து தமது மகளை அடுத்த நாள் கொன்று விடுவதாக கிராம பஞ்சாயத்தில் ஒத்துக் கொள்கிறார். எப்படியாவது சாதீயத்தை காக்க வேண்டுமல்லவா?.

அன்று இரவு அவரது வீட்டில் நடைபெறும் உரையாடல்கள் மனதை உருக்குவதாக இருக்கிறது. பாக்கியத்தின் தாய் சாமியம்மா அவளை சாகடித்து விடலாம் என்று கூறுவதும் , பாட்டி துளசி அதற்கு மறுப்பதும் , முடமாகிப்போன தங்கை செல்வராணி பழனியின் கால்களைப் பிடித்துக் வேண்டாமென்று கெஞ்சுவதும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அதுவரை  பெரியசாமியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருந்த பாக்கியம் கரைந்து போன சந்தர்ப்பம் அது. தன்னால் தமது குடும்பத்திற்கு நேர்ந்து விட்ட அவல நிலையை நினைத்து பழனியின் கால்களைப் பிடித்து கண்ணீர் விடுகிறாள். தானே விஷம் குடித்து சாவதற்கும் தயாராகி விடுகிறாள்.


பழனி தெளிவான ஒரு முடிவை எடுக்கிறார். பாக்கியத்திற்கு தட்டில் சோற்றைப்போட்டு சாப்பிடச் சொல்கிறார். அதில் விஷம் கலந்திருக்கும் என்று தெரிந்து கொண்டே பாக்கியம் கண்ணீர் மல்க சாப்பிடுகிறாள். இதுவே இந்த வீட்டில் நீ சாப்பிடும் கடைசி உணவு என்று சொல்வதும் , அவளுக்கு உணவு விக்கிய பொழுது  தண்ணீர் தருவதும் மனதை நெகிழச் செய்கிறது. அங்கே "இமையம்" என்ற படைப்பாளன் உயர்ந்து நிற்கிறான்.

அவள் சாப்பிட்டு முடித்ததும்  பழனி தன்னிடம் உள்ள பணம் , நகைகளை மூட்டையாகக் கட்டுகிறான். தனது அம்மா , மனைவி  மற்றும் மகள் செல்வராணியில் கழுத்தில் இருக்கும் நகைகளையும் கழற்றச் சொல்கிறான். அக்குடும்பம் குழம்புகிறது. அனைத்தையும் மூட்டையாக கட்டி பாக்கியத்தின் கையில் கொடுத்து " போ" ! , கண்காணாத தூரத்திற்கு போய் அவனோடு வாழு! என்கிறான். கடந்த மூன்று ஆண்டுகளாக   ஊருக்காக தமது பாசத்தையெல்லாம் மறைத்துக் கொண்டு புழுங்கிப் போய் வாழ்ந்து வந்த பழனி என்ற தகப்பனின் மனம் வெளிப்பட்ட தருணம் இது.

அவளை பெரியசாமியிடம் ஒப்படைக்க அவனிடம் கைபேசியில் உறுதி செய்து கொண்டு அவனின் உறவுக்கார பையன் கனகராஜிடம்  பாக்கியத்தை அதிகாலை நான்கு மணிக்கு ஒப்படைக்கிறான் பழனி. அப்போது தனது இடுப்பில் இருந்த வெள்ளிக்கொடியையும் கழற்றி அவளிடம் கொடுத்து கிளம்பு என்கிறான் பழனி. அந்த பெத்தவனின் மார்பை கட்டிக் கொண்டு அழுகிறாள் பாக்கியம்.

அன்று காலையே  தனது தோட்டத்தில் பாலிடாயில் குடித்து செத்துப்  போகிறான்  பழனி.


இந்த கதை எழுதி வெளி வந்த சில மாதங்களுக்குப் பிறகு தான் தருமபுரி , நத்தம் காலனி அழித்தொழிப்புச் சம்பவம் நடந்ததை நினவுப் படுத்துகிறார் இக்கதைக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். உண்மையில் இக்கதையை   சாதீய புரையோடிப்போன இந்தியாவின் பட்டி தொட்டிகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக இன்று தமிழகத்தில் நடைபெறும் சாதிக்கொடுமைகளுக்கும் , ஆணவக்கொலைகளுக்கும் இந்த " பெத்தவன்" விடை தருகிறான்.

நூல்: பெத்தவன்
ஆசிரியர்: இமையம்
வெளியீடு: பாரதி பதிப்பகம்
விலை: ரூ.35/-

சு.கருப்பையா

அலைபேசி : +919486102431